விவசாயியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி வெங்கடேஷ் தனது நண்பர்களுடன் நாகமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இவ்வாறு கூட்டமாக சேர்ந்து கிரிக்கெட் விளையாட கூடாது என நாங்கமங்கலத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரும், கிராம மக்களும் சேர்ந்து வெங்கடேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கோபமடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து பழனி குமாரை கட்டைகள் மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த பழனிகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து பழனி குமார் பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான வெங்கடேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.