பாலத்தின் மீது ஏறி மது அருந்திவிட்டு செல்பி எடுத்த நண்பர்களில் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிவானந்தா காலனியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரத்தினபுரி பகுதியில் வசிக்கும் பிரவீன், மாணிக்கம், கணபதி போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் கிஷோர், உடையாம்பாளையம் பகுதியில் வசிக்கும் சுரேஷ் போன்ற நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நண்பர்கள் 5 பேரும் இணைந்து மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் பக்கத்தில் இருக்கும் நெல்லிதுறை பாலத்திற்கு சென்றுள்ளனர்.
அந்த பாலத்தில் வைத்து அனைவரும் மது அருந்திவிட்டு பாலத்தின் மீது ஏறி நின்று செல்பி எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் செல்பி எடுத்துக் கொண்டிருந்த கணேசன் எதிர்பாராத விதமாக திடீரென தவறி ஆற்றுக்குள் விழுந்து விட்டார். இதனை பார்த்ததும் மாணிக்கம் அதிர்ச்சி அடைந்து அவரை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நண்பர்கள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.
இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் போராடி தண்ணீரில் தத்தளித்த கணேசனை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணிக்கத்தின் உடலை தீவிரமாக தேடுகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.