தர்மபுரி அருகே ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேலன். இவர் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது நண்பர் அசோக் குமார். இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் சிறு வயதிலிருந்தே நல்ல நண்பர்கள். இந்நிலையில் இருவரும் தர்மபுரிக்கு அவர்களது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மொரப்பூர் பகுதியை தாண்டி வரும் பெட்ரோல் நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு 108 அவசர ஊர்தியின் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், எவ்வித பலனும் இன்றி இரண்டு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் சிங்காரவேலன் என்பவருக்கு திருமணம் ஆகி பத்து வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அசோக்குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே கிராமத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மட்டுமின்றி கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.