நேற்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
கொரோனா தொற்று பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள், கல்லூரிகள், பள்ளிகள் போன்றவை மூடப்பட்ட நிலையில் ஐந்தாவது கட்டமாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஹோட்டல்களில் பார்சல் மூலம் மட்டும் விற்பனை செய்ய அனுமதிக்கப் பட்டிருந்த நடைமுறை மாற்றப்பட்டு, நேற்றிலிருந்து ஹோட்டலில் 50 சதவீத இருக்கைகளுடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.
இதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர்வதற்காக மேசை மற்றும் நாற்காலிகளை ஹோட்டல் நிர்வாகத்தினர் வரிசைப்படுத்தியும் அதனை தூய்மைப்படுத்தும் பணியையும் தீவிரமாக செய்து வந்தனர். இன்று முதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிடலாம் என்ற செய்தி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இந்நிலையில் ஹோட்டலில் சாப்பிட வருபவர்களுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி உள்ளிட்டவற்றிற்கு ஹோட்டல் உரிமையாளர்கள் முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு கூடுதலாக கட்டணம் எதுவும் வசூலித்து விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.