நண்பர்களுடன் செல்பி எடுத்தபோது கால்வாயில் தவறி விழுந்த ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார் .
திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியை சேர்ந்த பிரதீப் என்ற மாணவர் ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தனது நண்பர்களான சரவணன், வெங்கடேசன் மற்றும் அசோக்கிருஷ்ணா ஆகியோருடன் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்ல் இருந்து பூண்டி நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வரும் கிருஷ்ணா கால்வாய் அருகே உள்ள நயப்பாக்கம் பகுதியில் தனது நண்பர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் திருவள்ளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவனை தேடினர். ஆனால் மாணவர் பிரதீப் பிணமாக மீட்கப்பட்டார். இதன் பிறகு அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.