Categories
மாநில செய்திகள்

ஏப்.20ம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும்: தமிழ்நாடு பாடநூல் கழகம்

வரும் 20 ஆம் தேதி முதல் பாடநூல் கழக பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் என தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டுள்ளது. அப்படி வரும் பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வரவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, பாடநூல் கிடங்குகளை கிருமி நாசினி தெளித்து தயார்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய கடைகளை தவிர்த்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், மால் போன்றவை மூடப்பட்டன. பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன. மேலும், நாட்டில் கொரோனா பாதிப்பு குறையாததால், ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்ட ஊரடங்கு, ஒரு வாரத்திற்கு கடுமையாக கடைபிடிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். மேலும், வரும் 20ம் தேதியில் இருந்து ஊரடங்கு விதிகளில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 100 நாள் வேலை திட்டம், கட்டுமான தொழில்கள் போன்றவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் இந்த தளர்வு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான், பாடநூல் கழகம் இதுபோன்ற உத்தரவை வெளியிட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் கொரோனா தாக்கம் குறைந்துவிடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். அதனடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவத்தும் 20க்கும் அதிகமாக பாடநூல் குடோன்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |