தமிழகத்தில் ஜனவரி-11 முதல் ஜன-14 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை எப்போதாவது ஒரு சில ஆண்டுகளில் தான் மிகப்பெரிய அளவில் ஜனவரியில் மழையை ஏற்படுத்தும். பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்காது. மழை பெய்யும் வாய்ப்பு கூட பெரிதாக இருக்காது. இவ்வகையில் இப்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடித்து வருகிறது. சில இடங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் முதல் கன்னியாகுமரி வரை ஜனவரி 11-ஆம் தேதி முதல் ஜனவரி 14-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வருடம் ஜனவரியில் மழை தொடர்கிறது. ஜனவரி முதல் வாரம் வரை கிழக்கு பகுதியில் இருந்து காற்றழுத்த தாழ்வு வந்ததால் மழை பெய்கிறது. இப்போது இலங்கையின் தென்கிழக்கில் தெளிவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதால் மேலடுக்கு சுழற்சியானது காற்றின் ஈரப்பதத்தை தமிழ்நாட்டின் கடற்கரைக்கு தள்ளுவதால் அதிக மழை பெய்யலாம்.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கையின் தெற்கில் இருந்து குமரிக்கு வடக்கு தெற்கு மேற்கு நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான கடலூர் முதல் தூத்துக்குடி வரையில் பரவலான அல்லது கனமழை பெய்யலாம். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்” கூறியுள்ளார்.