உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையின் சில சிறப்பம்சங்களை தற்போது பார்க்கலாம். அதன்படி, இயேசு கிறிஸ்து கிமு 5-ம் நூற்றாண்டில் பாலஸ்தீன நாட்டில் உள்ள பெத்லகேம் என்ற நகரில் பிறந்தார். இதில் பெத்லகேம் என்பதற்கு அப்பத்தின் வீடு என்பது பொருள். அதன் பிறகு இயேசு என்ற எபிரேய வார்த்தைக்கு கடவுள் விடுவிக்கிறார் என்பதும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு அருட்பொழிவு பெற்றவர் என்பதும் பொருள். இயேசு கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டம் கிபி 240-ம் ஆண்டுகளில் மார்ச் 28-ம் தேதி நடைபெற்றதாக கிறிஸ்தவ நாள்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிபி 336 ஆம் ஆண்டு ரோம் நகரில் தான் முதன் முதலாக டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் தோன்றியது. இந்த தேதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கு போப் முதலாம் ஜூலியஸ் அனுமதி கொடுத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் கேரள் கீதங்கள் 4-ம் நூற்றாண்டில் ஆலயங்களில் பாடப்பட்ட நிலையில், 13-ம் நூற்றாண்டில் இருந்து தெருக்களிலும் பாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது குடில் அமைக்கும் வழக்கத்தினை 1223-ம் ஆண்டு அசிசி புனித பிரான்சிஸ் தொடங்கி வைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து 19-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் முறை தோன்றியது. இந்த முறை 19-ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும் சாண்டா கிளாஸ் குல்லா மற்றும் தொப்பை வைத்துக் கொள்ளும் முறை 19-ஆம் நூற்றாண்டில் தான் வந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீடுகளில் நட்சத்திரங்களை அலங்கரிக்கும் முறை 16-ஆம் நூற்றாண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. மேலும் கிறிஸ்துமஸ் மரங்கள் அமைக்கும் முறை 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய நிலையில், 1882-ம் ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் மரங்களை மின்விளக்குகளால் அலங்கரிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது