சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தனியார் பள்ளிகளை போன்று அரசு பள்ளிகளிலும் ஆங்கில மொழியை பயிற்றுவிப்பதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் தற்போது மாணவர்களுக்காக ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிக்கும்.
அதன் பிறகு மாநில வரலாறு மற்றும் கலாச்சாரம் போன்ற தலைப்புகளில் ஆங்கிலத்தில் உரையாடுவதற்கும் பள்ளிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு வாரந்தோரும் புதன்கிழமை அன்று இறைவணக்க கூட்டத்தில் மாணவர்கள் அனைவரும் 2 நிமிடம் ஆங்கிலத்தில் பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தங்கள் புத்தகத்தில் இருக்கும் தகவல்களை சேகரித்துக் கொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகளால் ஆங்கிலத்தின் மீதான அச்சம் படிப்படியாக விலகும்.
இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தினசரி வருகை பதிவேடு கண்காணிக்கப்பட்டு வருவதால் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு என்ன செய்ய முடியும்என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து வகுப்பில் பின் தங்கிய மாணவர்கள் நன்றாக கவனிக்கப்பட்டு அவர்களும் படிப்பில் முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் எடுப்பதோடு, ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் முறையான பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. மேலும் மாணவர்கள் இடையே ஆங்கிலம் பேசும் திறனை ஊக்குவிப்பதில் ஆசிரியர்களின் செயல்பாடுகளும் பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.