தமிழகத்தில் உள்ள சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. நம்முடைய சென்னை மாநகராட்சியை வந்தாரை வாழவைக்கும் சென்னை என்றே கூறலாம். அந்த அளவுக்கு பழைய மெட்ராஸ் மாகாணம் முதல் தற்போது வரை உள்ள புதிய சென்னை வரை பொருளாதார வளர்ச்சியானது உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சென்னை மாநகராட்சி ஐடி, மென்பொருள், தோல் பொருட்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், பொறியியல், வாகன உதிரி பாகங்கள் மற்றும் ஆட்டோமொபைல்ஸ் உள்ளிட்ட துறைகளில் முதல் இடமாக திகழ்கிறது.
உலகளாவிய நிறுவனங்களான கேட்டர்பில்லர், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் போர்டு, சிட்டி போர்டு மற்றும் கேப்டிவ் டெக்னாலஜி போன்ற நிறுவனங்களை அமைப்பதற்கு தமிழகத்தில் சென்னை மாநகராட்சி தான் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. சென்னை வர்த்தக மற்றும் தொழிற்சங்க கழகத்தின் தலைவர் ராமமூர்த்தி, விவசாயம் முதல் உற்பத்தி, சேவை, தொழில்நுட்பம் என அனைத்து விதமான பொருளாதார வளர்ச்சிகளிலும் வெற்றி அடைந்த முன்னணி நகரங்களில் சென்னையும் ஒன்று எனக் கூறியுள்ளார். இந்த சென்னை மாநகராட்சியில் பல்வேறு விதமான தொழில் நிறுவனங்கள் செயல்படுவதால் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடிகிறது.
இங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இருக்கின்றனர். இந்த தகவல் தொழில்நுட்ப துறையானது 2007 முதல் 2017 வரை 8.17% வளர்ச்சி அடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய புரட்சிக்கு பிறகு தெற்கின் டெட்ராய் என்ற பட்டத்தை பெறுவதற்காக பல்வேறு நகரங்கள் ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் ஆட்டோ உதிரி பாகங்கள் நிறுவனத்தை தழுவியது. ஒவ்வொரு 20 வினாடிக்குள் ஒரு காரையும், ஒவ்வொரு 90 வினாடிக்கும் ஒரு வணிக காரையும் உருவாக்கும் திறன் கொண்ட மிகப்பெரிய ஆட்டோ ஹப் சென்னை ஆகும்.
இந்த ஆட்டோ மொபைல்ஸ் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்களும் பயனடைந்தது. கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தால் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கொரியர்கள் தற்போது பயன்பெறுகின்றனர். சென்னையில் தாராளமயமாக்கலுக்கு பிறகு தொழில்துறையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது என வீல்ஸ் இந்தியா லிமிடத்தின் இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் கூறியுள்ளார். பல்வேறு நகரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களால் சென்னை மாநகராட்சியின் பொருளாதார வளர்ச்சியானது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சென்னை மாநகராட்சியானது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தொழில் மற்றும் வணிக மையமாகும். இந்த சென்னை மாநகராட்சி இந்தியாவின் அதிக உற்பத்தி திறன் கொண்ட மெட்ரோ பகுதிகளில் 5-வது இடத்தில் இருக்கிறது. இதனையடுத்து ஈசிஏ இன்டர்நேஷனல் நடத்திய இருப்பிட தரவரிசை சான்றிதழ் கணக்கெடுப்பின்படி, இந்திய நகரங்களில் பெங்களூருவை விட மிக உயரிய வாழ்க்கை தரம் மிக்கதாக சென்னை மாநகராட்சி இருக்கிறது என்று கூறியுள்ளது. சுருக்கமாக சொல்லப் போனால் இந்தியாவில் சென்னை மாநகராட்சி மிக உயரிய வாழ்க்கை தரத்தில் 2-வது இடத்தில் இருக்கிறது. இதில் முதல் இடத்தில் புதுடெல்லி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.