கொரோனா பெருந்தொற்று தற்போது குறைந்து வரும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் பொது இடங்களில் மக்கள் அதிக அளவு கூடினாலும், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக மக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக்கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும் என்று மாவட்ட வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனாலும் பலர் அரசின் விழிப்புணர்வை மீறி முகக் கவசங்கள் அணியாமல் வருவதை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை பல்வேறு விதமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு இருக்கிறது. மதுரையில் முகக்கவசம் அணியாதவர்கள், அரைகுறையாக அணிபவர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் புதிய செய்தி ஒன்றை போலீசார் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். ”ஃபர்ஸ்ட் ஜூம் ஆப்” என்ற இந்த செயலி சிசிடிவி கேமராவில் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலமாக முகக்கவசம் அணியாதவர்களை அடையாளம் கண்டுபிடித்து தரும் என கூறப்படுகிறது.