பிரிட்டனில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக விரைவில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று எரிசக்தி தலைவர் எச்சரித்திருக்கிறார்.
பிரிட்டனில் எரிவாயு இறக்குமதி செய்யப்படுவது சரிவடைய தொடங்கியிருக்கிறது. எனவே, வரும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மாலை நேரங்களில் 4 மணி முதல் 7 மணி வரை வீடுகளில் மின் தடை ஏற்படும். எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மின்சாரத்தை துண்டிப்பதை தவிர வேறு வழி கிடையாது என்று எரிசக்தி தலைவராக இருக்கும் ஜான் பெட்டிகிரேவ் கூறியிருக்கிறார்.
இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே மக்களுக்கு இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், இந்த மின்தடை திட்டம் மன்னர் சார்லஸ் மற்றும் நாடாளுமன்றம் அனுமதி அளித்த பின்பு தான் நடைமுறைக்கு வரும். இந்த மின்தடை காரணமாக வீடுகள் மட்டும் இல்லாமல் மருத்துவமனைகளிலும், வணிகங்களிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் இந்த மின்தடை காரணமாக ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் மக்கள் கடுமையாக பாதிப்படைவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலை, பிரிட்டன் நாட்டிற்கு மட்டுமின்றி ஐரோப்பாவிற்கும் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொள்ளும் போர் தான் என்று கூறப்படுகிறது. அதாவது, ரஷ்ய நாட்டிடமிருந்து பிரிட்டன் எரிவாயு இறக்குமதி செய்யவில்லை. எனினும் எரிவாயு செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 40% மின்சாரம் பெறுகிறது. இது மட்டுமல்லாமல் ரஷ்ய நாட்டின் எரிவாயுவை நம்பியுள்ள நாடுகளிடமிருந்து தான் எரிவாயுவை பிரிட்டன் இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.