ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையினர் தாக்கியதால் தான் விவசாயி உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அடுத்துள்ள ஏ.புனவாசல் கிராமத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு நிகழ்ச்சியில் அங்குள்ள கண்மாய் பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் போலீசார் வருவதை பார்த்ததும் சேவல் சண்டையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளனர். அதில் பாடுவனேந்தல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிநாதன்(45) என்பவர் கால் தடுமாறி கீழே விழுந்த நிலையில் சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதிநாதனை காவல்துறையினர் தாக்கியதால் தான் உயிரிழந்தார் என்றும், ஜோதிநாதன் உடலை பிரேதபரிசோதனை செய்யவேண்டும் என்றும் அவரது உறவினர்கள் முதுகுளத்தூர்-சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக், கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி லயோலா இக்னேசியஸ், துணை சூப்பிரண்டு அதிகாரி ஜான் பிரிட்டோ, தேசித்தர் சேகர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஜோதிநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் அவரது உறவினர்கள் நேற்று இரவில் கடலாடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் உறுதியளித்த பின்னரே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.