தமிழகத்தில் 7 மாவட்டங்களில் முழுமையான ஒரு ஊராடங்கை கடைபிடிக்க ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது உலக அளவில் தீவிரமடைந்து உள்ளது. இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாத இந்த வைரஸ், தற்போது இந்திய மக்களை ஆட்டம் காணச் செய்துள்ளது. இந்த பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கானது இந்தியாவில் ஐந்தாவது கட்ட நிலையை தாண்டியபோது சில விதிமுறைகளின் கீழ் தளர்த்தப்பட்டது.
இந்தியாவில் பலர் கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் போது ஊரடங்கை கடுமையாக கடைபிடித்துவிட்டு, தற்போது அதிகம் பரவி வரும் சூழ்நிலையில், இப்படி தளர்த்தி வெளியே விடுவது மிகப்பெரிய ஆபத்தாக கருதப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதேபோல் உலக சுகாதார நிறுவனமும் கொரோனா தாக்கம் அதிகமுள்ள நாடுகள் ஊராடங்கில் தளர்வுகளை ஏற்படுத்த முயல்வதை முடிந்த அளவிற்கு தவிர்க்க வேண்டும் என்றும், ஊரடங்கு ஒன்றுதான் தற்போது கொரோனாவிடமிருந்து நம்மைபாதுகாக்கும் என்று அறிவுறுத்தியிருந்தது.
தற்போது இந்தியாவிலும் ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன் இருந்த பாதிப்பை விட தற்போது பாதிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் பாதிப்பு அதிகரித்துச் செல்வதாகவும் மத்திய சுகாதார தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே உலக அளவில் கொரோனா பாதிப்பில் நான்காவது இடத்தை இந்தியா பிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அதை தடுப்பதற்காக தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும் 50 மாவட்டங்களில் மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, தமிழகத்தில் மட்டும் 7 மாவட்டங்களில் முழுமையான ஊரடங்கு ஏற்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாவட்டங்களின் பெயர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை இருப்பினும், அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டமாக சென்னை விளங்குவதால் அங்கு முழுமையான ஊரடங்கு கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது.