சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் சிலர் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தரப்பிலிருந்து மீண்டும் அதிமுகவிற்கு வருவோரை சேர்த்துக் கொள்ளவோ, அவர்களுக்கு பொறுப்பு வழங்குவோ கூடாது என்ற கருத்தை முன்வைத்தனர்.
பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைத்தால் தான் திமுகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியும். அதிமுகவை பலப்படுத்த முடியுமென சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கருத்தை முன்வைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு வந்தால், தங்களது பதவிகளுக்கு ஆபத்து வந்து விடும் என்று ஒரு சில மாவட்ட செயலாளர்கள் முணுமுணுங்கியதால் கூட்டத்தில் கருத்து மோதல் ஏற்பட்டு காரசார வாக்குவாதம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதம் நடைபெற்று உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க சிவி சண்முகம் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு அளிக்க மாட்டார்கள் என்றும், பாஜக உடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவிற்குத்தான் அதிக இழப்பு என்றும் சிவி சண்முகம் வெளிப்படையாகவும், ஆவேசமாகவும் பேசியதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஒரு சில அதிமுக நிகழ்ச்சிகளிலும் பாஜக உடன் கூட்டணி வைக்கக்கூடாது என பேசி இருந்த சிவி சண்முகம் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் தனது கருத்தை வெளிப்படையாக முன் வைத்திருக்கிறார். ஆனால் கூட்டணி குறித்து பேசியதும் ஆவேசமான சிவி சண்முகத்தை அடக்கிய எடப்பாடி பழனிசாமி, 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்பதோடு கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். நிர்வாகிகள் இஷ்டத்திற்கு பேச வேண்டாம் என கறாராக கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் எந்த கட்சிக்கு எவ்வளவு இடம் என்பதையும் தலைமையே முடிவு செய்யும் என்ற இபிஎஸ், பாஜக தன்னை கட்டுப்படுத்துவதாக சிலர் நினைப்பது உண்மை இல்லை என்றும், அவர் பேசியிருக்கிறார். அத்தோடு இந்த ஆலோசனை கூட்டத்தில் விரைவில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பிரமாண்ட மாநில மாநாடு நடத்தி, பலத்தை காட்ட எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்து இருப்பதாகவும் மாநாடு நடைபெறும் தேதி, இடம் குறித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னால் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்பதால் பேசவில்லை என்று கூறினார். அத்தோடு சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும், நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அவர் கூறினார்.