சட்டவிரோதமாக சூதாடிய குற்றத்திற்காக போலீசார் 24 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விட்டனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு வேப்பங்கொட்டை பாளையத்தில் பணத்தை வைத்து சீட்டாட்டம் தொடர்ந்து நடைபெறுவதாகவும், விடுமுறை தினங்களில் வெளியூரில் இருந்து ஆட்கள் வந்து இந்த சீட்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் புகாரானது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று விட்டது.
இதனை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், தனிப்படை போலீசார் வேப்பங்கொட்டை பாளையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த சோதனையின் போது, சரளை தோட்டம் என்ற இடத்தில் பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக பீளமேடு பகுதியில் வசித்து வரும் சுதாகரன், சௌரிபாளையம் பகுதியில் வசித்து வரும் கீர்த்தி குரு, எட்டிமடை பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார், வடவள்ளி பகுதியில் வசித்து வரும் ஜெகதீஷ், மடத்துக்குளம் பகுதியில் வசித்து வரும் பழனிசாமி மற்றும் அந்த தோட்டத்தின் உரிமையாளரான சுப்பிரமணி போன்றோர் சட்ட விரோதமாக சூதாடியத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து சூதாடிய குற்றத்திற்காக 24 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துவிட்டனர். அதோடு அவர்களிடம் இருந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 820 ரூபாய் பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் அதனை காமநாயக்கன்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற சூதாட்டங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கும் பொருட்டு உள்ளூர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.