வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கமல் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பதில் அளித்துள்ளார்.
வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல் சுவாரசியமாகவும் மாறப்போகிறது. இதுநாள்வரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என்று இந்த தேர்தல் பலமுனை போட்டியாக சுவாரசியமாக நடக்க போகிறது. கமலஹாசன் தன்னை முதலில் வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் ரஜினியின் அரசியல் எவ்வாறு இருக்கும்? என்று தெரியவில்லை.
தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கணக்குகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ரஜினி மற்றும் கமல் இணையலாம் என்று பேச்சுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது கமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் கமலிடம் ரஜினியுடன் கட்சியில் இணைவது குறித்து கேட்ட போது,”நானும் ரஜினியும் தமிழக மக்களுக்காக எந்தவொரு ஈகோவையும் விட்டு கொடுத்து ஒன்றிணைய தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.