Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு…. நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் கடந்த 1 – ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காந்திமதி அம்பாளுக்கு 4 – ஆம் திருவிழாவை முன்னிட்டு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து அதிகாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் பகல் 11 மணிக்கு காந்திமதி அம்பாளுக்கு ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து சுவாமி சன்னதிக்கு அம்பாள் சப்பரத்தில் சென்று வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின் காந்திமதி அம்பாளுக்கு  மேளதாளம் முழங்க வளையல்கள் அணிவிக்கப்பட்டது.  இதனையடுத்து சுவாமி சன்னதிக்கு அம்பாள் சப்பரத்தில் சென்று தனக்கு வளையல் அணிவிக்கப்பட்டதை  தெரியப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு வைத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனையடுத்து இரவு 8.30 மணிக்கு அம்பாள் வெள்ளி வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று அம்பாளுக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியை பார்த்து தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து 10 – ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Categories

Tech |