பாலிவுட்டில் பிரபல நடன ஆசிரியராக வலம்வருபவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் மீது இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் 33 வயது உள்ள ஒரு பெண் நடன ஆசிரியைப் புகார் ஒன்று கொடுத்துள்ளார்.
கணேஷ் ஆச்சார்யா தன்னை ஆபாச விடியோ பார்க்கச் சொல்வதாகவும், தனது சம்பளத்தில் பாதியை தரகுத் தொகையாகக் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடன இயக்குநர்கள் சங்கத்தில் பொதுச்செயலாளர் பதவியில் இருந்துகொண்டு, தன்னை நடன ஆசிரியர் சங்கத்திலிருந்து நீக்கிவிட்டதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.
இதனால் மாத வருமானத்தை நம்பியிருந்த தான் வேலையில்லாமல் தவித்து வருவதாக, அப்பெண் வேதனை தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி, தன்னுடன் வேலைசெய்யும் சக பெண் நடன இயக்குநர்களைத் தவறான பாதைக்கு இயைந்துபோக வலியுறுத்தியதாகவும், அதற்கு மறுப்புத் தெரிவித்ததால் தன்னை கணேஷ் அடித்து பகிரங்கமாக துன்புறுத்தியுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார்.
தற்போது இந்தப் புகாரை எதிர்த்து கணேஷ் ஆச்சார்யா அப்பெண் மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவுசெய்துள்ளார். இது குறித்த கணேஷ் கூறுகையில், “2007 ஆம் ஆண்டு நான் பணியாற்றிய நடனக் குழுவில் என்னுடன் அவரும் இருந்தார். அது தவிர எனக்கு அப்பெண்ணை பற்றி எதுவும் எனக்குத் தெரியாது. அப்பெண் என்னைக் குறித்து பதிவுசெய்த புகார் முற்றிலும் தவறானவை.
ஒரு உறுப்பினரை ஒரு சங்கத்திலிருந்து வெளியேற்றுவது என்பது சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து எடுக்கும் முடிவாகும். அதுமட்டுமல்லாது நான் தரகுக்கு (கமிஷன்) எதிரானவன்” என்றார்.
தொடர்ந்து கணேஷின் வழக்கறிஞர் ரவி சூர்யவன்ஷி கூறுகையில், “ஒஷிவாரா காவல் துறையினரிடம் அப்பெண்ணின் மீது அவதூறு வழக்காகப் பதிவுசெய்துள்ளோம். பொய்யான புகார் அளித்துள்ளதால் அவருக்கு எதிராக அம்போலி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளோம். கணேஷ் ஆச்சார்யா விரைவில் அப்பெண்ணின் மீதும் அவருக்கு உதவும் நபர்களுக்கு எதிராகவும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்” என்றார்.