விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பதற்காக செயற்கை குளங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட மாநில அரசு பொதுமக்கள், மண்டல்களை அறிவுறுத்தி இருக்கிறது. இந்தநிலையில் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் கடற்கரைகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி செயற்கை குளங்களை அமைத்து உள்ளது. அதன்படி மும்பையில் 167 செயற்கை குளங்களை அமைத்து உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மாநகராட்சி செயற்கை குளம் அமைத்ததற்கு தாராவியை சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
இது பற்றி சச்சின் என்பவர் கூறுகையில், ” வழக்கமாக நாங்கள் சிலைகளை கரைக்க தாதர் அல்லது மாகிம் கடற்கரைக்கு தான் செல்ல வேண்டும். ஆனால் இந்த ஆண்டு வீட்டருகிலேயே சிலைகளை கரைக்க முடியும்” என்று கூறியுள்ளார். தாராவியில் சாகுநகர், முனிசிபல் பள்ளிக்கூடம் அருகில் உள்ள சிவ்ராஜ் மைதானம் மற்றும் நாயக் நகர் பகுதியில் உள்ள பம்பிங் கிரவுண்ட் ஆகிய 3 இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மாநகராட்சி 31 இடங்களில் மட்டுமே செயற்கை குளங்கள் அமைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.