தன்னை திருமணம் செய்துகொள்ள மோசடி செய்த கும்பல் குறித்து நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள நடிகையான பூர்ணாவுக்கு டிக் டாக்கில் அன்வர் என்ற பெயரில் நபரொருவர் அறிமுகமாகி தனக்கு கோழிக்கோட்டிலும் துபாயிலும் நகை கடைகள் இருப்பதாக கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அவர் பூர்ணாவை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறிய நிலையில் பூர்ணா அன்வர் மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த கும்பலை பார்த்த பிறகே பூர்ணாவுக்கு அது மோசடி கும்பல் என்பது தெரியவர காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் அந்த கும்பலை கைது செய்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அன்வர் என்ற பெயரில் பூர்ணமிடம் பேசியது ரபிக் என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து நடிகை பூர்ணா கூறுகையில் துபாயில் நடந்து கொண்டிருக்கும் தொழிலுக்கு தனக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது என ரபிக் கேட்டார். பின்னர் அவரது கும்பல் மிரட்டல் விடுத்தனர். அதனை தொடர்ந்து நாங்கள் புகார் கொடுத்தோம். இதனால் பெரிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
முகமது அலி, அன்வர் அலி என்ற போலி பெயர்கள் வைத்து எங்களிடம் பேசினார்கள். 10 லட்சம் வேண்டும் என போனில் பணம் கேட்டது ரபிக்கா அல்லது ஷமீமா என்பது சரியாக தெரியவில்லை.முன்கூட்டியே திட்டமிட்டு மோசடி செய்வதற்காகவே எனது பெற்றோரிடமும் என்னிடமும் பேசியுள்ளனர். மலபாரில் இருக்கும் நல்ல குடும்பத்து சம்பந்தம் என்றுதான் முதலில் எங்களை அவர்கள் தொடர்பு கொண்டனர்.
எனது சகோதரன் மற்றும் தந்தையிடம் அவர்கள் கோழிக்கோட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் எனக் கூறியுள்ளனர். மிகவும் மரியாதையுடன் அவர்கள் பேசியதால் வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்களை நேரில் சந்தித்தபோது தான் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. சரத் மற்றும் ரமேஷ் டிரைவர் என கூறினார்கள் அவர்களைப் பார்த்ததும் சந்தேகம் மேலும் அதிகரித்தது. எங்களை தாக்குவதற்கு அவர்கள் திட்டமிட்டு இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வந்த சமயம் வீட்டில் ஏராளமானோர் இருந்ததால் எங்களை தாக்கும் திட்டத்தை கை விட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்