பெரம்பலூரில் சிலிண்டர் விநியோகத்திற்கு ரூ.50 கூடுதலாக வசூல் செய்யப்படுவதால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியிலும், அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் சமையல் எரிவாயு பெரம்பலூர், எசனை, வி.களத்தூர் பகுதிகளில் உள்ள சிலிண்டர் விற்பனை நிலையங்களில் இருந்து வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எசனையில் உள்ள தனியார் கியாஸ் ஏஜென்சியில் இருந்து சென்ற மூன்று மாதங்களுக்கு முன்பு சிலிண்டர் வினியோகம் செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிலிண்டருக்கு பதிவு செய்யும் நுகர்வோர்களுக்கு வி.களத்தூர், பெரம்பலூர் பகுதிகளில் உள்ள தனியார் சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களில் இருந்து சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தொண்டபாடி, வேப்பந்தட்டை, பாலையூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படும் சிலிண்டர்களின் விநியோக விலை ரூ.50 உயர்வாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ரூபாய் 875 சிலிண்டர் ரசீதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரூ.925 வசூல் செய்வதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். சிலிண்டரின் விலை அதிகரித்து வரும் நிலையில் டெலிவரி சார்ஜ் என்ற பெயரில் ரூ.50 கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவது இல்லத்தரசிகளுக்கு கொந்தளிப்பையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.