தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பாலைக்குடி போலீசார் 90 காலனி பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கருவகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த சில நபர்களை போலீசார் கண்டனர். இதனை அடுத்து போலீசாரை பார்த்ததும் திருப்பாலைக்குடி தெருவில் வசித்து வரும் ரிபாய்தீன், அலாவுதீன், சிராஜூதீன், மற்றும் ராசித் போன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பிறகு அவர்கள் கீழே போட்டு விட்டு சென்ற பிளாஸ்டிக் பையை போலீசார் சோதனை செய்ததில் 74 தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் அதில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நான்கு நபர்களும் மீன் பிடி தொழில் செய்து வருபவர்கள் எனவும், கடலில் மீன் பிடிப்பதற்காக இந்த ஜெலட்டின் குச்சிகளை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜெலட்டின் குச்சிகளை கைப்பற்றியதோடு, தப்பியோடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.