Categories
கட்டுரைகள் பல்சுவை

தலைமுறைகள் தேய்வதில்லை…!!

” இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே  விரும்புகின்றனர்: பெரியவர்களை மதிப்பதில்லை:  பெற்றோருடன் வாதிடுகின்றனர்: ஆசிரியர்களை அச்சம் அடையச் செய்கின்றனர்”  – இவை அனைத்தும் நமது இளைஞர்களை பற்றி யாரோ இப்போது கூறிய குற்றச்சாட்டுகள் அல்ல கிமு நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த நாம் அனைவரும் போற்றுகின்ற  கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் கூறியதாக சுட்டப்படுகிறது.  சாக்ரடீஸ் ‘ஏன்’ என்று கேள்வி கேட்டு அறிந்த பின்னரே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் எனக் கூறிய மாபெரும அறிஞர். இளைஞர்களிடையே விழிப்புணர்வை  உண்டாக்க முயன்றதற்காகக்   குற்றம் சாட்டப்பட்டு, விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டவர். அவர் இப்படிக்  கூறி இருப்பார் என்று சந்தேகம் பல நூற்றாண்டுகளாய் எல்லோரையும் குழப்பி கொண்டிருக்கிறது. அவர் கூறினார் இல்லையோ, ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் தங்களை தொடரும் அடுத்த தலைமுறை இளைஞர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு இவற்றுள் சில வாகவே உள்ளன.

எந்த ஒரு சமுதாயத்திலும் எப்போது எடுத்துக்கொண்டாலும் மூன்று தலைமுறையேனும் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக தந்தை, மகன், பேரன் என்று  எடுத்துக் கொள்ளலாம். முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாறு திரும்பும் என்ற நியதிக்கு ஏற்ப தந்தை செய்த அடிப்படைச்  செயல்களை – அதாவது கல்வி கற்பது, வேலை செய்வது, குடும்பத்தை பேணுவது போன்றவைகளையே மகனும் செய்கிறான். அதற்குப் பின்னர் அடுத்த பேரனும் அதே செய்வான். அடிப்படைக்  குறிக்கோள்கள் செயல்கள் ஒன்றாயினும், செய்யப்படும் காலமும், சூழ்நிலையும் வேறாக உள்ளன அதன் காரணமாகவே ஒரு தலைமுறை செய்வது அதன் மூத்த தலைமுறை கொள்ள முரணாக தெரிகிறது. ஆனால், உண்மை அதுவல்ல அப்படியிருப்பின் பின் எப்படி தலைமுறைக்குத் தலைமுறை புத்தர், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா போன்ற முத்துக்கள் தோன்றி கொண்டிருக்க முடியும்? அதனால் தலைமுறைகள் தேய்கின்றன என்பது ஒரு கற்பனை தான். இளைய தலைமுறை காலம் சூழ்நிலை நவீன முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஏற்ப மாற்றத்தை பின்பற்றுவது மூத்த தலைமுறைக் தெரியலாம். ஆனால், அது தேவைக்கு ஏற்ற மாற்றம் தானே ஒழிய சீரழிவு கிடையாது என்பதே உண்மை.

குறிப்பாக, இந்திய  இளைஞர்கள் மீது கூறப்படும் குறைகளாக உள்ள கலாச்சாரச்  சீரழிவு, தன்னல நோக்கு, பணத்தின் அருமை தெரியாமல் செலவழித்தல் போன்றவற்றை மேம்போக்காகக்  கூறப்படுபவை. ஆராய்ந்து பார்த்தால் இப்போது உள்ள இளைஞர்கள் எதிர்காலத்தை கவனத்துடன் திட்டமிடுவதுடன், அது  மேம்படுத்துவதற்கு முனைப்போடு உழைக்கின்றனர் என்பதே உண்மை. தங்கள் உழைப்பின் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்தையும், உலக அரங்கில் அதன் பெருமையையும் உயர்த்துகின்றனர். அதனால் ‘தலைமுறைகள் தேய்கின்றன’ என்ற கற்பனைக் கவலையைக்  கலைந்து, அவர்களுக்கு வாய்ப்பும், பொறுப்பும் கொடுத்து தோள்கொடுத்துத்  துணை நின்றால் வீட்டுக்கும் நாட்டுக்கும் அவர்கள் பெருமையை மட்டுமே பரிசாகப் பெற்றுத் தருவார் என்பது உறுதி.

 காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் நம்முள் !

தலைமுறைகள் தேய்வதில்லை மண்ணுள் !

Categories

Tech |