தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பாஜக ஆளுநருக்கு சந்தேகம் இருப்பதாகவும், அனைத்தும் முறையாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகும் ஆளுநர் கையெழுத்திடுவார் என்று விளக்கம் அளித்து வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பார்த்திபன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆளுநரை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பின்போது ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமைச்சர் ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்த அமைச்சர், ஆளுநரிடம் ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்குமாறு கேட்டுள்ளதாகவும், அதில் சில சந்தேகங்கள் இருப்பதாக அவர் கேட்டதால் அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
அதோடு இந்த மசோதா பரிசீலனையில் இருப்பதால் விரைவில் முடிவெடுக்கப்படும் என்று ஆளுநர் உறுதி அளித்ததாகவும் அமைச்சர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் மரணங்கள் அதிகரிப்பதால் தற்போது GETOUTRAVI என்ற ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. மேலும் இந்த ஹேஸ்டேக் தற்போது தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.