சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான 2-வது பெரிய கடற்கரையாகும். இந்த கடற்கரைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களும் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை மெரினா கடற்கரையில் 142 அடி உயரத்தில் வைப்பதற்கு திமுக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நினைவுச் சின்னம் கடலுக்கு அடியில் புல்வெளியில் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து பேனா நினைவு சின்னத்தை பொதுமக்கள் அடையும் விதமாக உயர்தர பாலம் ஒன்றும் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன்படி கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தூரம் நடந்து பொதுமக்கள் பேனா நினைவுச் சின்னத்தை அடையும் விதமாக பாலம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சற்று காலம் பேனா நினைவு சின்னம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் தேசிய பத்திரிகையாளர் தின விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்து கொண்ட நிலையில், செய்தியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட இருக்கிறது.
இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதியும் கிடைத்துள்ளது. இந்த பேனா நினைவு சின்னமானது அனைத்து விதமான விதிமுறைகளுக்கும் உட்பட்டு தான் கட்டப்படுகிறது. தற்போது மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேனா நினைவு சின்னத்தை அமைக்கும் பணிகள் தாமதம் ஆகிறது. மேலும் கூடிய விரைவில் பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று கூறினார்.