வெவ்வேறு பெயரில் மூன்று ஆண்களை திருமணம் செய்து பணம் பறித்து ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வரும் இவர் மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த சொப்னா என்ற ஐபிஎஸ் அதிகாரியை சந்தித்து சென்ற வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு மூன்று மாதங்கள் ஹைதராபாத்தில் ஆஞ்சநேயலும், சொப்னாவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். விடுமுறை முடிந்ததும் ஆஞ்சநேயலு மனைவி சொப்னவை டென்மார்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால் அவரோ தனக்கு வேலைதான் முக்கியம் எனக் கூறி டென்மார்க் செல்வதற்கு மறுத்து ஹைதராபாத்தில் இருந்துள்ளார். அதன் பின்னர் ஆஞ்சநேயலு டென்மார்க்ற்கு சென்று விட சொப்னா தனது மாமனார், மாமியாரிடம் தகராறு செய்து உங்கள் மகன் என்னை ஏமாற்றிவிட்டார் எனக்கு நஷ்ட ஈடு வேண்டுமென பணம் கேட்டுள்ளார். அவர்கள் மருமகளை சமாதானம் செய்ய முயன்றும் சொப்னா பிரச்சினையை பெரிதாக்கினார்.
இதனால் காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளிக்க பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியது. ஐபிஎஸ் என்று கூறிய சொப்னா ஐபிஎஸ் இல்லை என்றும், அவரது உண்மையான பெயர் சொப்னா இல்லை என்றும் தெரிய வந்தது. அதோடு ரம்யா என்ற பெயர் கொண்ட அவர் இதற்கு முன்னதாக சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரித்திவிராஜ் மற்றும் ஆத்மகூரை சேர்ந்த சுதாகர் என்பவரையும் வித்தியாசமான பெயர்களைக் கூறி திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்.
இந்த வரிசையில் மூன்றாவதாக சிக்கியவர் தான் ஆஞ்சநேயலு மூன்று பேரை ஏமாற்றிய பெண்ணை தற்போது காவல்துறையினர் கைது செய்த நிலையில் அவர் 3 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காப்பகம் ஒன்றில் அந்த பெண்ணை சேர்த்து இவரால் வேறு யாராவது பாதிக்கப்பட்டுள்ளனரா என்று காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.