முட்புதரில் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் சாலையோரத்தில் இருக்கும் முட்புதரில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டு உடனடியாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த பெண் குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து குழந்தைக்கு காயங்கள் எதுவும் இல்லாததால் குழந்தையானது டாக்டர்கள் கண்காணிப்பில் ஆரோக்கியமாக இருக்கின்றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை இவ்வாறு முட்புதரில் வீசி சென்ற தாயின் விவரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.