நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி அடுத்த பி.களபம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மா. இவர் பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு அதிக பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த ஹரிஷ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து தன்னுடன் விண்ணப்பித்திருந்த சக மாணவர்களிடம் ஹரிஷ்மா கேட்ட போது அவர்களுக்கு ஹால்டிக்கெட் வந்தது தெரியவந்துள்ளது.
இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த ஹரிஷ்மா மருத்துவராக வேண்டும் என்ற கனவில் மண் விழுந்து விட்டது என கூறி தனது பெற்றோரிடம் கதறி அழுதுள்ளார். தேர்வு எழுத முடியாது என மிகுந்த மனவேதனையில் இருந்த ஹரிஷ்மா வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஹரிஷ்மாவை பெற்றோர் உடனடியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஹரிஷ்மா உயிரிழந்தார்.