விபத்தில் உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் இளைஞர்கள் கேலி செய்ததால் தான் விபத்து ஏற்பட்டதாக புகார் அளித்துள்ளனர்
உத்தர பிரதேச மாநிலம் கவுதம்புத்நகர் மாவட்டத்தை சேர்ந்த சுதிக்ஷா என்ற பெண் 4 கோடி ரூபாய் உதவித் தொகையில் அமெரிக்காவில் மேல்படிப்பு படித்து வந்தார். தற்போது கொரோனாவால் சொந்த ஊருக்குத் திரும்பிய அவர் நேற்று தனது மாமா வீட்டிற்கு சென்றுவிட்டு இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்த சுதிக்ஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சுதிக்ஷாவின் குடும்பத்தினர் கூறுகையில் எங்கள் மகள் சாலையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு இளைஞர்கள் புல்லட்டில் வந்து மோசமாக பேசியதோடு கேலி செய்துள்ளனர்.
அவர்களை சுதிக்ஷா கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவளின் கவனத்தை ஈர்க்க புல்லட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பின்னர் சுதிக்ஷாவின் அருகே வந்து அவ்விருவரும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கவனம் சிதறி சுதிக்ஷா விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை என்றும் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து குடும்பத்தினரின் புகாரை ஏற்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணை கேலி செய்த இளைஞர்களை தேடி வருகின்றனர்