மணப்பெண் காணாமல் போனதால் பெண் வீட்டார் நஷ்ட ஈடு தர வேண்டும் என மணமகன் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு, மதுராந்தகம் பகுதியில் வசிக்கும் இளம் பெண்ணுடன் திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் திருமணமானது நசரத்பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நடத்தப்படுவதாக இருவீட்டாரும் அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். இதனை அடுத்து திருமணத்திற்கு முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சி மாலையில் நடைபெற்ற போது மணமகன் வீட்டார் அனைவரும் திருமண மண்டபத்திற்கு முதலில் வந்து விட்டனர்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் மணமகள் வீட்டார் வராததால் அவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு மணமகன் வீட்டார் இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு மணப்பெண் வரவேற்பு நிகழ்ச்சிக்காக அழகு நிலையத்திற்கு சென்றதாகவும், அதன் பிறகு தங்கள் பெண் காணாமல் போய்விட்டதாகவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் வீட்டார் மனமகளுக்காக எடுத்துக் கொடுத்த பட்டுப்புடவை, வரவேற்பு நிகழ்ச்சிக்கு விருந்து வைக்க செய்த செலவு, நகைக்காக கொடுத்த பணம் போன்ற அனைத்தையும் பெண்வீட்டார் நஷ்ட ஈடாக தரும்படி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.