புதுகோட்டை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொன்ற 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேக் மற்றும் சாவித்திரி. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்து, தங்களது வீடுகளில் காதலை தெரிவிக்க, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து தங்களது வீடுகளில் உள்ள பெற்றோர்களை பேசி புரிய வைக்க இருவரும் நினைத்த சமயத்தில், சாவித்திரி சில நாட்களாக விவேக்கிடம் பேசுவதும் இல்லை, தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அவர் சாவித்திரியின், வீட்டை சுற்றி இருப்பவர்களிடம் விசாரிக்கையில், அதிர்ச்சி தகவல் ஒன்று அவருக்கு கிடைத்தது. இதையடுத்து உடனடியாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தான் உயிருக்கு உயிராக காதலித்து வந்த எனது காதலி சாவித்திரியை பெண் வீட்டார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் ஆணவ கொலை செய்து எரித்து விட்டதாக புகார் அளித்துள்ளார். இவரது புகாரை ஏற்ற காவல்துறையினர் காதலியின் பெற்றோர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.