15 வயது சிறுமியை 3 வாலிபர்கள் இணைந்து ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி திடீரென காணாமல் போனதால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமி இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு வந்து மூன்று வாலிபர்கள் தன்னை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றதாக தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் இந்த சிறுமியை ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இவ்வாறு நடந்தவைகளை தனது பெற்றோரிடம் கூறி அந்த சிறுமி கதறி அழுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதனையடுத்து பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட இந்த வழக்கை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். அப்போது பூந்தமல்லி பகுதியில் வசித்து வரும் மணி, கார்த்தி, செல்வராஜ் ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் 3 பேரும் இணைந்து சிறுமியை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததை காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து போஸ்கோ சட்டத்தின் கீழ் 3 பேரையும் கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.