உத்திர பிரதேச மாநிலத்தில் செல்போனில் பேசியபடியே பெண் ஒருவர் பாம்புகள் மீது அமர்ந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார்.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள ரியானவ் கிராமத்தை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் தாய்லாந்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா என்பவர் தாய்லாந்தில் இருக்கும் தன்னுடைய கணவன் ஜெய்சிங்கிடம் அடிக்கடி போனில் பேசி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர்கள் பேச ஆரம்பித்து விட்டாலே மணிக்கணக்கில் பேசுவார்கள்.
அதேபோல நேற்றும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்த கீதா பேச்சு சுவாரஸ்யத்தில் அப்படியே வீட்டில் இருந்த படுக்கை அறைக்கு சென்றுள்ளார். அப்போது படுக்கை அறையின் பெட்டியில் 2 பாம்புகள் பின்னிப் பினைந்து விளையாடிக் கொண்டிருந்தன. இதனை கவனிக்காமல் கட்டிலில் அமர்ந்துள்ளார் கீதா. இதையடுத்து திடீரென ஆவேசம் அடைந்த அந்த பாம்பு கீதாவை கொத்தியது. இதில் அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
அதன்பின் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அந்த 2 பாம்புகளும் மறுபடியும் கட்டிலில் விளையாடிக்கொண்டிருந்தன. உடனே ஆத்திரத்தில் அந்த 2 பாம்புகளை அடித்தே கொன்றனர். ”பாம்புகள் இரண்டும் இனச்சேர்க்கையில் இருந்தபோது அந்த பெண் அந்த பாம்பு மீது அமர்ந்துள்ளதால் அது கீதாவை கொத்தியது” என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.