திருமணம் ஆன ஒரு வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியில் கஸ்தூரி என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சென்ற ஆண்டு பொய்கைபட்டியில் வசித்து வந்த ஜெயராமன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து கஸ்தூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு படிப்பை மணப்பாறை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் சில மாதங்களாக பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று கஸ்தூரி வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர் கஸ்தூரியின் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.