செல்போனில் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புதியம்புத்தூர் பகுதியில் கடற்கரையாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மதுமிதா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களின் மகள் மதுமிதா பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனை எடுத்து மதுமிதா கேம் விளையாடுவதால் அவரது தாய் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மதுமிதா தனது வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று மண்ணெண்ணையை தனது உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்ட அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது மகள் கருகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அந்த மாணவியின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த புதியம்புத்தூர் காவல்துறையினர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.