சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்த முதியவரை எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதுடைய சந்திரன்.இவர் கூலித் தொழில் செய்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் மகளுடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்து வெளியேறி தனது சொந்த உழைப்பில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சந்திரனின் உடல் கருகிய நிலையில் இருளப்பபுரம் பகுதியில் ஒரு வீட்டின் வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவியில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஐந்து சிறுவர்கள் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த சந்திரனை எழுப்பி அவரிடமிருந்து சிகரெட் லைட்டரை வாங்கி வேட்டியில் தீ வைத்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. விசாரணையில் அப்பகுதியில் பழைய பிளாஸ்டிக் கடை ஒன்றில் தங்கி வேலை பார்த்து வரும் மதுரையை சேர்ந்த 5 சிறுவர்கள் தான் இந்த கொடூர செயலை செய்தது தெரியவந்தது.
5 பேரில் பாலாஜி என்பவனின் காதலி அவனுடன் செல்போனில் பேச மறுத்ததால் அவன் விரக்தியில் இருந்துள்ளான். இதனால் ஐந்து பேரும் சோகத்தை போக்கலாம் என்று கூறி பாலாஜியை மது குடிக்க அழைத்து சென்றனர். மது போதையில் இருந்த அவர்கள் சாலையில் சென்று கொண்டிருந்த கார்களின் மேல் கற்களை வீசிக்கொண்டு வந்தனர் . அப்போது சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த சந்திரனை எழுப்பி தீப்பெட்டி கேட்டுள்ளனர். அப்போது அவர் தன்னிடம் தீப்பெட்டி இல்லை லைட்டர் தான் உள்ளது என்று கூறி அவர்களிடம் லைட்டரை கொடுத்துள்ளார். லைட்டரை வாங்கிய சிறுவர்கள் திடீரென்று அவரது வேஷ்டியில் தீயை பற்ற வைத்தனர்.
உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் முதியவர் சந்திரன் உயிருக்குப் போராட போதை கும்பல் அங்கிருந்து எந்த வித பதற்றமும் இல்லாமல் சென்றது. இந்நிலையில் 15 வயது சிறுவன் மற்றும் பாலேஸ்வரன், லட்சுமணன், பாலாஜி, இலங்கேஸ்வரன் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கொலை வழக்கில் கைதான 15 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.