தற்கொலைப்படை தீவிரவாதிகளாக மாற்றுவதற்கு 300க்கும் மேற்பட்ட மாணவிகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நைஜீரியாவில் போகோ ஹராம் பகுதியில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த தீவிரவாதிகள் ஊருக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ- மாணவிகளை கடத்தி சென்று அவர்களை தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக மாற்றுகின்றனர். அதன் வரிசையில் நைஜீரியாவின் ஜம்பாரா மாகாணத்தில் இருக்கும் ஜங்கேபே கிராமத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்த மாணவிகளை சிறை பிடித்து விட்டனர்.
இதனால் அச்சத்தில் சில மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவர்களிடமிருந்து தப்பித்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டனர். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் லாரிகளை வரவழைத்து கடத்திய மாணவிகளை அதில் ஏற்றி உள்ளனர். மேலும் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறும்போது, 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கடத்தி செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். எனவே கிராமத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அந்த மாணவிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று நைஜீரியாவின் காட்சினா மாகாணத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 400 க்கும் மேற்பட்ட மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்தியதும், அவர்களை பாதுகாப்பு படையினர் திரும்பி மீட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.