செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், NLC சுரங்கம் 1, சுரங்கம் 2 ஆகிய இரண்டு சுரங்கங்களுக்கான விரிவாக்கம் செய்வதற்கு நிலத்தை கையகப்படுத்த என்எல்சி நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.ஏறத்தாழ 2௦க்கும் மேற்பட்ட கிராமங்களை சார்ந்த மக்கள் நிலங்களை பறிகொடுக்கும் நிலையில் உள்ளனர். இந்த நிலங்களை கையகப்படுத்துவதில் NLC நிர்வாகம், கடந்த காலத்திலேயே நிலம் வழங்கிய மக்களை ஏமாற்றி இருக்கிறது.
அவர்கள் வாக்குறுதி அளித்தபடி இழப்பீடும் வழங்கவில்லை, வேலை வாய்ப்பு வழங்கவில்லை. அவர்களை நடுத்தெருவில் நிறுத்தி விட்டது. தற்போது அதே NLC நிர்வாகம் இந்த விரிவாக்க பணிகள் மேற்கொள்ள இருக்கும் சூழலில், நிலம் கையகப்படுத்துகின்ற போது ஆலங்கா என்று சொல்லப்படக்கூடிய இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கான விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட இருக்கின்ற கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அடுத்து இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவும் முழுமையான ஆய்வை நடத்தி, ஒரு ஏக்கருக்கு எவ்வளவு இழப்பீடு தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்களோ, அந்த கோரிக்கைகளை பரிசீலித்து 2000ம் ஆண்டிலிருந்து இதுவரை நிலம் வழங்கிய மக்கள், வழங்க போகின்ற மக்கள் ஆகியோருக்கு பாகுபாடு இல்லாமல் இழப்பீடு வழங்குவதற்கு தகவல்களை திரட்டி தர வேண்டும். அந்த குழுவிற்கு அப்படிப்பட்ட பணியை ஒப்படைக்க வேண்டும்.
அந்த குழுவில் அறிக்கையின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதில் யாரும் பாதிக்கப்படக்கூடாது. நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் வேல்முருகன் அவர்கள் சொன்னது போல, ஏற்கனவே நடைபெற்ற கூட்டங்களில் நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையை அல்லது ஆலோசனையை பொதுமக்கள் ஏற்கவில்லை. ஏக்கருக்கு 25 லட்சம் தர முன்வந்த நிலையிலும் அது போதாது, ஒரு ஏக்கர் பரப்பளவில் அவர்கள் பல கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்க கூடிய அளவிற்கு பழுப்பு நிலக்கரியை வெட்ட இருக்கிறார்கள்.
நாங்கள் நிலங்களை பறிகொடுத்து நிற்கதியாக நிலையில் இருக்கிறோம். எனவே எங்களது வாழ்வாதாரம் பறிபோகின்ற சூழலில் எங்களுக்கு கட்டாயம் நிரந்தரம் ஒரு வீட்டிற்கு ஒருவருக்கு நிரந்தரமான வேலை வழங்க வேண்டும் என்பதும், ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதும் முதன்மையான கோரிக்கைகளாக முன் வைக்கின்றார்கள். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, இடதுசாரிகள் கட்சிகள் இன்னும் ஆதரவாக இருக்கக்கூடிய தோழமைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த இருக்கிறோம். ஆர்ப்பாட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.