7சேலம் அருகே ஆண் குழந்தை பெற்றுத் தருமாறு கணவனும் மாமியாரும் டார்ச்சர் செய்ததால் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மூலசெங்கோடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா.. இவரது மனைவி திவ்யா. இவர்கள் இருவருக்கும் 3 மற்றும் ஒன்றரை வயதில் வர்ணிகா, தன்ஷிகா என்று இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மூன்றாவதாக ஆண்பிள்ளை வேண்டும் என்று கணவரும் அவரது மாமியாரும் சேர்ந்து திவ்யாவை தொந்தரவு செய்து வந்துள்ளனர்.
ஆனால் மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்தால் கவனிக்க முடியாததை எண்ணி அவர் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைக்க, மாமியார் உன் முகத்தில் விழிப்பதே பாவம் என்றும் நாள்தோறும் சபித்து வருவார். இதனால் மனமுடைந்த திவ்யா நேற்று வீட்டின் அருகே உள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் முதலில் வீசி கொன்று விட்டு அதன் பின் அவரும் கிணற்றினுள் விழுந்துள்ளார்.
கிணற்றில் தண்ணீர் கம்மியாக இருந்ததன் காரணமாக முதுகில் அடிபட்டு பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் திவ்யாவிடம் வாக்குமூலம் பெற்று விட்டு கணவர் மற்றும் மாமியாரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.