கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், “தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளான பொதுப்போக்குவரத்து, அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, இவை அனைத்தும் மக்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி கேளிக்கைகளில் நடத்தவும் தங்கள் விருப்பப்படி வெளியே செல்வதற்காகவும் அல்ல. மேலும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் அரசு விதித்து உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும் நடந்து கொள்ள வேண்டும்.
தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளதால் நாம் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டோம் என்பது அர்த்தம் அல்ல. மாநிலத்தில் தொற்று என்பது அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் நாம் மத்திய மாநில அரசுகள் செய்யும் அர்ப்பணிப்புகளை கருத்தில் கொண்டு நடந்துகொள்ள வேண்டும். மேலும் நாடு முழுவதும் பார்த்தால் இந்தியாதான் பாதிப்பில் மூன்றாம் இடம் உள்ளது. எனவே மக்கள் மத்திய மாநில அரசுகள் கூறியபடி, முக கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, தனிநபர் இடைவெளி போன்றவற்றை முக்கியமாக கடைபிடித்து வெளியில் சென்றுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு நாட்டு மக்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.