சென்னை முகலிவாக்கம் அடுத்த கெருகம்பாக்கத்தில் வீட்டு வேலைக்கு வந்த பெண் வைரக் கம்மல் மற்றும் 4 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளார். போலீசார் அவரை கைது செய்தனர்.
கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூரில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து நகைகளை பீரோவில் வைத்துள்ளனர். அப்போது தான் ஒரு வைர கம்மல் மற்றும் 4 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மாங்காடு போலீஸ் ஆய்வாளர் சிட்டிபாபு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பீரோ உடைக்கப்படாமல் திருட்டு நடந்திருப்பதை பார்த்தவர் வீட்டில் இருப்பவர்கள் தான் நகையை திருடியிருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டார். அவர்களது வீட்டில் வீட்டு வேலை செய்யும் அம்பிகாவிடம் (38) விசாரணை மேற்கொண்டனர்.
அவரது கைரேகைகளை எடுக்க வேண்டும் என கூறிய போது அம்பிகாவே பீரோவில் இருந்த நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பீரோவின் சாவியை முதலில் திருடியுள்ளார். வீட்டினர் மாற்று சாவி போட்டு பயன்படுத்தி வந்துள்ளனர். சிறிது நாட்கள் கழித்து எடுத்தால் யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து நகையை திருடியுள்ளார். ஆனால் வீட்டினர் மகனின் திருமணத்தின் போது மருமகளுக்கு போடுவதற்காக வைர கம்மல் வைத்திருந்தனர். அதனை திருடியதால் வசமாக சிக்கிக்கொண்டார். அவரிடம் இருந்து வைர கம்மல் மற்றும் 4 பவுன் தங்க நகைகளை போலீசார் கைப்பற்றினர்.