மீன்சுருட்டி பகுதியில் ஆடுகளை திருட முயற்சித்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள மீன்சுருட்டி பகுதியில் இருக்கும் வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டியன். இவர் சரக்கு ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் தனது அக்காவான கமலியின் வீட்டில் வீர பாண்டியனும் அவரது தாயாரும் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அவர்கள் எழுந்து பார்த்த போது மர்ம நபர்கள் ஆடுகளை திருடி கொண்டிருந்தது தெரியவந்தது.
ஆடு திருடுபவர்கள் இவர்களைப் பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓட முயற்சித்துள்ளனர். அவர்களைப் பிடிக்க முயற்சித்தபோது வீரபாண்டியனை கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து வீரபாண்டியன் மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ஆட்டைத் திருட முயற்சித்த பக்ருதீன், ராஜ்குமார், ரஞ்சித்குமார், விஜய், பூபாலன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அவர்களின் மேல் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.