ஆடுகளை திருடிய குற்றத்திற்காக 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பிக்கட்டி, எடக்காடு, கீழ்குந்தா, மஞ்சூர் போன்ற பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் திருட்டு போனதாக அதன் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடு திருடும் நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில் மஞ்சூரில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் சிவசக்தி நகரில் வசிக்கும் வினோத் மற்றும் யோகேஸ்வரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை இருவரும் இணைந்து திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து 2 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 25 ஆடுகளை பறிமுதல் செய்துள்ளனர்.