2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள ரயில் நிலையங்களில் வட இந்தியாவிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் அவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் அவரை பிடித்து அவரிடம் இருந்த பையில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் 4 கிலோ தங்க நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் 2.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளுக்கான ஆவணங்களை அந்த வாலிபரிடம் கேட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபர் கொடுத்த ஆவணத்தை பரிசோதித்து பார்த்த போது அது போலியானது என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் சிங் ராஜ்பாத் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.