டிவிக்குள் தங்க கட்டிகளை மறைத்து வைத்து துபாயில் இருந்து கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்துள்ளது. அவரின் உத்தரவின்படி சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பயணிகளை தீவிரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசித்து வரும் முகமது பதுருதீன் என்பவரை பிடித்து விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் அதிகாரிகள் சந்தேகத்தில் அவர் வைத்திருந்த எல்.இ.டி டிவியை பிரித்து சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் டிவிக்குள் 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் 58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1 கிலோ 200 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.