நாமக்கல் மாவட்டத்தில் மாமனார் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த நகைக்கடை ஊழியர் மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்துள்ள நல்லூரில் ரவிக்குமார்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கற்பகம்(29) என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கற்பகம் அவரது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து ரவிக்குமார் நாமக்கல்லில் ஒரு நகைக்கடையில் பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்றுள்ளார்.
அப்போது வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டிருக்கும் பொது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து ரவிக்குமார் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனையறிந்த மோகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர் பஞ்சவர்ணம்(53) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.