இன்று முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது.
எனவே குற்றாலம் அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் குற்றாலம் அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தனிநபர் இடைவெளி கடைபிடித்து குற்றால அருவிகளில் குளிக்கலாம். மேலும் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.