அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 5 கிலோ அரிசி எப்படி போதும் என பொதுமக்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2005 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து, வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிலர் 70 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைந்த நிலையில் 5 கிலோ அரிசி மட்டும் நிவாரணமாக வழங்கினால் என்ன பலனை கொடுக்கும் என பேச தொடங்கியதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட பொருளாளர் செல்வராஜ், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.