மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய அரசு சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறிய கூகுள், “நாங்கள் சமூக வலைதளம் அல்ல தேடுபொறி நிறுவனம் தான்” எனவே எங்களுக்கு புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது. அதனை கேட்ட நீதிமன்றம் மத்திய அரசுக்கு இதுகுறித்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக ஓடிடி தளங்கள், சமூக வலைதளங்கள், செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை மத்திய அரசின் மின்னணு தகவல் நுட்ப அமைச்சகம் கொண்டு வந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு ட்விட்டர் நிறுவனம் எதிராக வழக்கு தொடர்ந்து, தனியுரிமைக் கொள்கையை பாதிக்கும் வகையில் டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகள் இருப்பதாகவும், கருத்து சுதந்திரமும் இதனால் பாதிக்கப்படலாம் என்று கூறியதோடு, அரசுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த டுவிட்டர் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
அதனை தொடர்ந்து இந்தியாவில் புதிய சட்டங்களின்படி எழும் புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக தர்மேந்திர சதுர் என்பவரை இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியாக ட்விட்டர் நியமித்துள்ளது. அதேசமயம் புகார்களை கையாளுவது, அரசின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுப்பது, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களையும் நீக்குதல் ஆகியவற்றிற்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்றும், அவ்வாறு நியமிக்கப்படுபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும் என்றும் புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த அதிகாரிகளை நியமிப்பது தொடர்பாக டுவிட்டரிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.